TamilsGuide

ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திர ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திர ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. 2025 பெப்ரவரி 20ம் திகதியன்று நிவ் யோர்க்கில் அமையப்பெற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் பல்லுயிரினங்களின் பெருக்கம் தொடர்பில் அரசுகளுக்கிடையில் இடம்பெற்ற மாநாட்டின் போது இந்த ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு ஜுன் மாதம் 19ம் திகதி அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய நாடுகளின் சமுத்திர சட்டத்தின் மாநாட்டின் (UNCLOS) கீழ் இது செயற்படுத்தப்பட்டுள்ளது.

17 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன், 109வது நாடாக இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து, ஒப்பந்த அங்கீகரிப்பு மற்றும் ஒப்பந்த விதிகள் நிறைவேற்றப்படுவதை கண்காணிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அமைச்சர்களின் பங்கேற்புடன் கூடிய குழுவை அமைக்கும். முன்கூட்டிய அங்கீகாரத்தை நோக்கமாக கொண்டு உள்நாட்டு சட்ட வரைபை மேம்படுத்துவதற்கு சர்வதேசத்தின் உதவியுடன் சட்டத்தை தயாரித்து ஒருங்கிணைப்பதே குழுவின் எதிர்பார்ப்பாகும்.

BBNJ ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம் சமுத்திர பாதுகாப்பு குறித்தான நாட்டின் முயற்சிகளின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுப் பகிர்வு என்பவற்றில் இலங்கையின் திறனை முன்னேற்றமடையச் செய்ய முடியும். அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமையானது ஐக்கிய நாடுகளின் சமுத்திர சட்டம் தொடர்பிலான மாநாட்டிற்கு (UNCLOS) இலங்கையின் தொடர் அர்ப்பணிப்பு மற்றும் பலதரப்பட்ட ஒத்துழைப்பு மூலம் சமுத்திர நிர்வாகத்தை உறுதி செய்வதை வலியுறுத்துகிறது.
 

Leave a comment

Comment