இந்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எவ்வாறெனினும், பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில், 24-27 க்கு இடையில் மழையைுடனான வானிலையை எதிர்பார்க்கலாம்.
இதன் போது நிலவும் வெப்பமான வானிலை குறையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
எனினும், இது தற்காலிகமானவை என்று கூறிய அவர், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பமான காலநிலை மீண்டும் திரும்பும் என எச்சரித்தார்.
இதேவேளை, வெப்பமான காலநிலையில் சிறுவர்களிடையேயான பாதிப்பு அதிகமாக இருக்கும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளியில் வேலை செய்பவர்கள், விவசாயிகள் விழிப்புடன் இருக்குமாறும் வறண்ட காலநிலையை கையாள போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் எச்சரித்தார்.
எனவே, போதியளவு உடலுக்கு நீரேற்றத்தை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறெனினும், இந்த காலப்பகுதியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வறண்ட காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.