TamilsGuide

அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் -பிரதமர் ஹரிணி அமரசூரிய

“எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று  (08) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் கல்வித் துறையிலும்  காணப்படும்  பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக  குறித்த சேவைகளில் காணப்படும்  பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் (தேசிய மற்றும் மாகாண) முறையான இடமாற்றங்கள், பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்தல்,நிதி வசூலித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பிரிவேனா அமைப்பில் உள்ள சிக்கல் நிலைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் அரை அரச பாடசாலைகளில் கட்டணம் வசூலிப்பது, வகுப்பு அளவுகளை 35 மாணவர்களுக்கு மட்டுப்படுத்துவது, வகுப்பு அளவுகளை மட்டுப்படுத்துவது மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைக்கான வெட்டுப்புள்ளி பரீட்சைகளை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது  கவனம் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து  பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது, வெற்றிடங்கள் இல்லை எனில் மாணவர்களை சேர்க்காமல் இருத்தல், கல்வி அமைச்சு இதற்காக சிபாரிசு கடிதங்களை வழங்காது இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர்,எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment