TamilsGuide

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

எனினும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதின்,ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள வடக்கைச் சேர்ந்தவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்பாக உள்ளார்களா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் தற்போது உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்துமாறும் சிறிதரன் கேட்டுக்கொண்டார்.

மேலும் ரஷ்ய இராணுவத்தில் உள்ளவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்குரிய வாய்ப்பு உள்ளதா எனவும் வினவியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த விஜித்த ஹேரத் ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ளவர்கள் அவர்களது உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

Leave a comment

Comment