கனடாவின் அரச கூட்டுத்தாபனமான கனடா போஸ்ட் நிறுவனம் ஐம்பதுக்கும் மேற்பட்ட முகாமையாளர்கள் தர உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்துள்ளது
கனடாவில் தேசிய அளவில் தபால் சேவையை பொறுப்பேற்று நடத்து அரச கூட்டுத்தாபனமான கனடா போஸ்ட் நிறுவனம் ஐம்பதுக்கும் மேற்பட்ட முகாமையாளர்கள் தரத்தில் நீண்ட காலம் பணியாற்றிய உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் செய்தி சில மணி நேரங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ளது.
இந்த பணி நீக்க அறிவித்தலுக்கு முக்கிய காரணமாக நீண்ட காலமாக கனடா போஸ்ட் நிறுவனம் எதிர் கொண்ட "மோசமான நிதி நிலைமை" தான் என்பதைஇந்த தேசிய தபால் சேவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது..
"கனடா போஸ்ட் நிறுவனமானது, அது எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க நிதி மற்றும் செயற்பாட்டு சவால்களுக்கு தொடர்ந்து பதிலளித்து வருவதால், கார்ப்பரேட் அளவிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த வார தொடக்கத்தில் முகாமையாளர்கள் தரத்தில் நீண்ட காலம் பணியாற்றிய உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்தது என்று கனடா போஸ்ட் கூட்டுத்தாபனம் 6ம் திகதி வியாழக்கிழமை ஊடகங்களுக்கும் அரசாங்க நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களில் அரைவாசிப் பேர் ஒட்டாவாவில் பணியில் இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் ரொறன்ரோ மற்றும் கனடாவின் பிற பகுதிகளிலும் பணியாற்றியதாகவும் கனடா போஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இந்த முடிவுகள் ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் அவை தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான நிதி நிலைமையை பிரதிபலிக்கின்றன" என்று கனடா போஸ்ட் நிர்வாக அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும், சில வாரங்களுக்கு முன்னர் கனடா போஸ்ட் நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருந்த சிலரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியும் தற்போது கசிந்துள்ளது


