ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.
சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நண்பர் களின் உதவியுடன் சென்னைக்கு ரயில் ஏறினார்.
முன்பு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த நாகிரெட்டி, படத் தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் கதாநாயகனாக யாரை போடுவது என்ற குழப்பம் வந்தபோது, அவர் கண் முன் சட்டென வந்தது, அவரது பழைய நண்பர் ராம்சந்தர். ஆம் எம்.ஜி. ஆரின் அப்போதைய பெயர் அதுதான்.
திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெருவெற்றிபெற்ற அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். முதல்பட தயாரிப்பின்போது எம்.ஜி. ஆருக்கும், தேவருக்கும் இடையில் சிறு மனத்தாங் கல் ஏற்பட்டதால், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த ரஞ்சன், உதயகுமார், போன்றோரை வைத்து தன் அடுத்தடுத்த படங்களை தயாரித்தார் தேவர்.
தேவரின் வெற்றிகரமான தயாரிப்பு முறை எம்.ஜி. ஆருக்கு என்னவோ செய்திருக்கலாம். இருவருமே ஒரு சந்திப்பில் ஈகோவின்றி தங்கள் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். விளைவு, பெரிய இடைவெளிக் குப்பின் 'தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்த திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தேவர்!
தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார்.
1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர் , கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது.
அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது.


