பங்களாதேஷ், இந்தோனேஷியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் அடுத்தடுத்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு குறித்த மூன்று கப்பல்களும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பாக்கிஸ்தான் கடற்படையின் பி.என்.எஸ். அஸ்லட் என்ற போர் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பல் இலங்கை கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்கப்பட்டது. இந்த கப்பல் 123 மீற்றர் நீளமுடையதாகும்.
243 பணியாட்களைக் கொண்ட இந்த கப்பலின் கப்டனாக மொஹமட் அசார் அக்ரம் தலைமை தாங்குவதுடன கட்டளை அதிகாரியாக பணியாற்றுகின்றார்.
இந்த கப்பல் எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றுமுன்தினம் இந்தோனேஷிய கடற்படையின் போர்கப்பலான க்ரி பங் டொமோ – 357 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 97 மீற்றர் நீளமுடைய இக்கப்பல் 111 பணியாளர்களைக் கொண்டது. இதன் கட்டளை அதிகாரியாக கப்டன் டெடி குணவன் வித்யாத்மோகோ செயற்படுகின்றார்.
இந்த கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் நேற்று நாட்டிலிருந்து புறப்பட்டது.
அதேசமயம் நேற்று முன்தினம் வருகை தந்த பங்களாதேஷ் போர் கப்பல் பி.என்.எஸ்.சொமுத்ரா இன்று நாட்டிலிருந்து புறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.