TamilsGuide

எனக்கு திமிரு அதிகமாதான் இருக்கும் - இளையராஜா

தமிழ் சினிமாவின் பொக்கிஷம், முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் முதலில் இருப்பவர் இளையராஜா. இவர் பல தலைமுறைகளை அவரது இசையால் வழிநடத்தி வருகிறார். இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரின் பாட்டை கேட்காத மனிதர்களே இல்லை என சொல்லலாம்.

இவரது மேடை பேச்சு மற்றும் சில நேர்காணல்கள் சர்ச்சைக்குரியவையாக அமைந்துள்ளன. தான் இசைக்கும் பாட்டுக்கும் காப்புரிமை கேட்பது, ஆணவம் மற்றும் கர்வமாக பேசுவது என பல மாற்றுக்கருத்து பலருக்கு இவர் மேல் உண்டு.

இவர் தற்பொழுது வாலியண்ட் சிம்ஃபனி என்னும் இசையை உருவாக்கியுள்ளார். இந்தியாவில் இவரே முதல் முறையாக சிம்ஃபனியை உருவாக்கியுள்ளார். இது குறித்த நேர்காணல் ஒன்றில் பேசிய இசைஞானி இளையராஜா பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவரது கருத்தை கேட்டு, இவருக்கு ஆணவம் மற்றும் கர்வம் அதிகம் உள்ளதாக ஒரு தரப்பும், அவர் அப்படி பேசலாம் அவருக்கு அந்த உரிமையும், தகுதியும் இருக்கிறது என் மற்றொரு தரப்பும் இணையத்தில் வாதிட்டு வருகின்றனர்.

அதில் அவர் கூறியதாவது "நான் இசையமைத்த பல பாடல்களில் நான் வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையை அறிமுகப்படுத்தி உங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். இசையமைப்பாளர் பாக், மொசார்ட், பீத்தோவன் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும். அவர்களை பற்றி யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். நான் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இசைத்துறையில் பல விஷயங்களை நான் உருவாக்கியுள்ளேன், அறிமுகப்படுத்தி உள்ளேன். ஒரு இசை ரசிகனுக்கு பல மாதிரியான உலக இசையை என் பாடலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளேன்."

"நான் சிம்ஃபனியை உருவாக்கி இருக்கிறேன் என்றால் எனக்குள் எப்பேற்பட்ட இசை ஆர்வம் இருக்கிறது என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பலருக்கு வயிற்றெரிச்சல் தான் ஏற்படுகிறது. எல்லாருடைய வாழ்க்கையிலும் என் இசை இருக்கிறது. நீங்கள் கேட்ட உடனே நான் இசையை கொடுக்கனுமா? அப்படி கொடுத்தால் நான் சரவண பவன் ஆகிவிடுவேன்."

"என் இசையை கேட்டு குழந்தை உயிர் பிழைத்துள்ளது, ஒரு யானை கூட்டம் என் பாடலை கேட்க வந்துள்ளது. இதைச் சொன்னால் அவருக்கு தலைகனம் மற்றும் கர்வம் அவருக்கு அதிகம் என கூறுவார்கள். எனக்கு வராமல் வேறு யாருக்கு வரும்? எனக்கு தான் டா வரணும் கர்வம். எனக்கு திமிரு அதிகமாதான் இருக்கும். உலகத்திலேயே யாரும் செய்ய முடியாததை நான் செய்துள்ளேன். அப்போ எனக்கு தானே திமிரு வர வேண்டும். வேலை தெரிந்தவனிடம் மட்டுமே கர்வம் இருக்கும்," என கூறியுள்ளர். இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment