TamilsGuide

நடிகர்கள் அரசியல்வாதியாக மாறுவதற்கு நீங்கதான் காரணம் - விஷால்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த 'மத கஜ ராஜா' திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்கு தயாரானது. இப்படத்தை தயாரித்த ஜெமிமனி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்தி வைத்தனர்.

இதனை தொடர்ந்து இப்படம் பொங்கல் வெளியீடாக 12 ஆண்டுகள் கழித்து கடந்த 12-ந்தேதி வெளியாகி உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வருகிறது.

அதனை தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி நடிகர் விஷாலை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் அப்படத்தை பென்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், சென்னை காளிகாம்பாள் கோவிலில் இன்று நடிகர் விஷால் மனமுருகி சாமி தரிசனம் செய்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த போது, மீண்டும் சுந்தர் சி. உடன் இணையப்போவதாக தகவல் வருகிறதே என்ற கேள்விக்கு விஷால், கூடிய சீக்கிரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-

* நவம்பர், டிசம்பர் மாதங்களில் சந்திக்கும் போது அரசியல் குறித்து சொல்வேன். அதுக்குன்னு நேரம் இருக்கு. நான் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன். நீங்க எல்லாம் நல்லது செய்தால் நாங்க ஏன் அரசியலுக்கு வாரோம். நாங்க எங்க தொழிலை பார்த்துக்கிட்டு போவோம். நீங்க பண்ணலை என்பதை நாங்கள் கண்ணால் பார்க்கிறோம். சுதந்திரம் வந்து 70 வருஷம் ஆகிருச்சு. ஆனால் இன்னும் குடிநீர் வசதி இல்லாமல் பல கிராமங்கள் இருக்கு.

* ஒரு போர்வெல் போடுவதற்கு 4 வாரமாக மின்சாரம் தருவதற்கு மின்சார வாரியம் யோசித்தார்கள். குடிநீருக்காக போர்வெல் போடுவதற்கு 4 வாரமா அப்ரூவல் ஆகாமல் இருந்தது. அதுக்கு பிறகு கடினமா கேட்கும் போது அப்ரூவல் ஆனது. அதன்பிறகு 235 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி செய்துள்ளோம். பக்கத்தில் உள்ள 4 கிராமங்களும் பயன்படுத்திக்கலாம். இன்னும் எத்தனையோ கிராமங்கள், சாலை, மருத்துவ வசதி இல்லாமல் நிறைய விசயங்கள் இருக்கு. அது ரொம்ப தர்மசங்கடமா இருக்கு. அதையெல்லாம் நீங்க நிறைவேற்றினா நாங்க நடிக்கப் போயிடுவோம். நீங்க நடிகர்களா மாறும் போது நடிகர்கள் எல்லாம் அரசியல்வாதியா மாறதுக்கு நீங்க தான் வழி கொடுத்து இருக்கீங்க...

* ஜி.எஸ்.டி.ல சூதாட்டத்தையும், சினிமாவையும் ஒரே பிரிவில போட்டு இருக்காங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. நாங்க இரண்டு வரி கட்டுறோம். அதை குறைத்தால் நல்லா இருக்கும்.

* இனிமேல் எந்தப் பேட்டியாக இருந்தாலும் இப்படி ஆட்டிக்கிட்டுதான் பேசுவேன். இந்த நடுக்கத்தால் 4 நிமிஷத்தில் மொத்த உலகத்தில் எத்தனை பேர் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். நேசிக்கிறாங்க என்பதை காட்டியிருக்கீங்க நன்றி என்றார்.
 

Leave a comment

Comment