உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி இயக்கப்படும் 'லக்னோ-மும்பை புஸ்பக்' எக்ஸ்பிரஸ் ரெயில் ரெயில் நேற்று முன்தினம் மகாராஷ்டிரத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் வந்து கொண்டு இருந்தபோது ரெயிலின் பெட்டி ஒன்றில் தீப்பொறி பறந்ததாக தெரிகிறது. இதனால் ரெயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக பயணிகள் இடையே வதந்தி பரவியது. ரெயிலில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். அப்போது, பயணி ஒருவர் பயத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
மகேஜி மற்றும் பர்தாடே ரெயில் நிலையங்களுக்கு இடையே நின்ற ரெயிலில் இருந்து உயிர் பயத்தின் காரணமாக பயணிகள் பலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்தனர்.
அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பயணிகள், தண்வாளத்தை கடந்துவிட முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரெயில, தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது மோதிச் சென்றது.
விபரீதமாக நடந்த இந்த விபத்தில் 12 பயணிகள் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளரும், பின்னணி பாடகரும், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
லக்னோவ் - டெல்லி இடையேயான ரெயிலில் ஒரு பெட்டியில் தீ பரவியதாக யாரோ பரப்பி விட்ட பொய் தகவலை நம்பி , அபாய சங்கிலியால் ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி தப்பிக்க முயன்ற பயணிகளில் 15 க்கும் மேற்பட்டோர் எதிரில் வந்த பெங்களூரு ரயிலில் அடிபட்ட இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது அரசு தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


