TamilsGuide

உலக நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும்

”உலக நாடுகளுக்கு எரிபொருளினை  விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே  அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதன்மூலம் உள்ளுர் சந்தைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும். ஆனால் இவ்வாறு விநியோகிக்கின்ற எரிபொருளின் அளவு தொடர்பாக இன்னும் எட்டப்படவில்லை.

அதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகின்றது. எனினும் இது தொடர்பான உடன்பாடுகள் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து சினோபெக் நிறுவனமே இறுதி முடிவுகளை எடுக்கும்.

சீன அரசின் சினோபெக் நிறுவனத்துடன் நிலம் மற்றும் ஏனைய பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
உதாரணமாக, சிங்கப்பூர் எந்தவொரு எரிபொருளையும் உற்பத்தி செய்யாத ஒரு நாடாக உள்ளது. எனினும், அந்த நாடு இன்று உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒரு மையமாகச் செயற்படுகிறது.

எனவே, சினோபெக் நிறுவனத்தினால் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர்
இலங்கையும் அவ்வாறானதொரு எரிபொருள் மையமாக மாற்றமடையும்” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment