மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இந்தி நடிகர் சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 16 கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை 6 இடங்களில் கத்தியால் குத்தினார்.
பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கானுக்கு 2 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு கை மற்றும் கழுத்தில் கட்டுகளுடன் அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
கத்தியால் குத்தப்பட்ட பின், மருத்துவமனைக்கு செல்ல கார் ஓட்ட ஆள் இல்லாததால் தனது மகனுடன் ஆட்டோவில் சைஃப் அலி கான் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன், அவசர காலத்தில் உதவிய அந்த ஆட்டோ ஓட்டுனர் பஜன் சிங் ராணாவை அழைத்து சைஃப் அலி கான் கட்டியணைத்து நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளது.
தான் சவாரி அழைத்து சென்றது சைஃப் அலி கான் என்று முதலில் தனக்கு தெரியாது என்றும், பிறகே அதை தெரிந்துகொண்டதாகவும் ஆட்டோ டிரைவர் பஜன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஆட்டோ கட்டணமாக சைஃப் அலி கான் 11500 ரூபாயை வழங்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சைஃப் அலி கானை தாக்கிய நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை தானேவில் வைத்து போலீஸ் கைது செய்தது. முகமது என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.