TamilsGuide

கத்திக்குத்து வாங்கிய இந்தி நடிகர் சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றார்.

ஆறு முறை கத்தியால் குத்தப்பட்ட சைஃப் அலி கான் பலத்த காயங்களுடன் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சைஃப் அலிகானின் கைகளிலும், கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், முதுகுத் தண்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சைஃப் அலி கான் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். அவரை கடந்த 4 நாட்களாக மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று பிற்பகல் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது வீட்டுக்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு மேல் அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். வெளியாட்களை சந்தித்தால் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், யாரும் அவரைக் நலம் விசாரிக்க வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தானேவில் பதுங்கியிருந்த முகமது என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்றும் அவர் வங்கதேசத்தைச் சேர்த்தவர் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அவர் இந்தியாவில் இருந்துள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்காக அவர் சைஃப் அலிகான் வீட்டில் நுழைந்ததாகவும், தான் ஒரு நடிகரின் வீட்டில் நுழைகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். 

Leave a comment

Comment