தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இதனிடையே இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை முன்னணியாக கொண்டு 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார்.
இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட கவுதம் மேனன் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது "நடிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. கேமரா முன் நிற்க எனக்கு பிடிக்காது. சில சூழ்நிலைக்காரணமாக நான் நடித்தேன். சில இயக்குனர்கள் என்னை நடிக்க அழைத்தார்கள். என்னால் அதை மறுக்க முடியவில்லை. நான் தற்பொழுது டிராகன் மற்றும் சந்தானத்துடன் டிடி ரிடர்ன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளேன். ஆனால் எந்த படத்திலும் நடித்ததற்காக வருந்தியது கிடையாது" என கூறியுள்ளார்.


