ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 150 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெறுவதற்குள் ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் 100 பிணயக்கைதிகளை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா மற்றும் கத்தார் நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை தயாரானது. ஆனால் கடைசி நேர ஆதாயத்தை பெறுவதற்காக ஒப்பந்தத்தின் முக்கிய பகுதிகளை ஹமாஸ் மறுப்பதாக இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு தெரிவித்திருந்தார். ஆனால் ஹமாஸ் அதை மறுத்தது.
பின்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் அமைச்சரவை போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட இருக்கிறது.
6 வாரம் போர் நிறுத்தத்தின்போது முதற்கட்டமாக 33 பயணக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் எனத்தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 95 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் விடுதலை செய்ய இருக்கிறது.
இஸ்ரேல் நேரப்படி நாளை மாலை 4 மணிக்கு முன்னதாக பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் அனைவரும் இளைஞர்கள் அல்லது பெண்களாக இருப்பார்கள்.
அதேவேளையில் ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளில் பலர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. இதனால் பிணயக்கைதிகள் பெயர் வெளியிடப்பட்டால்தான் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுடன் காசா பகுதியில் உதவிப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படும்.