அமெரிக்க அரசாங்கம் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதித்தால் சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய நிதி அமைச்சர் டொமினிக் லீபிளான்க் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் கனடாவின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையிலான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது பற்றிய விரிவான விடயங்களை தற்போதைக்கு வெளிப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இருபதாம் திகதி புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
அதன் பின்னர் வரி விதிப்பு மேற்கொள்ளப்பட்டால் அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாகாண முதல்வர்கள் வரிவிதிப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவுக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தை துண்டிப்பதாகவும் எரிபொருட்களை விற்பனை செய்யப் போவதில்லை எனவும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த வரி விதிப்பு விவகாரம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறித்த தெளிவான விபரங்களை மத்திய அரசாங்கம் வெளியிடவில்லை.
ஏற்கனவே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சித் தலைமை பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கத்திற்குள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதற்கு அப்பால் இவ்வாறான ஒரு பிரச்சினையை அணுகுவது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிட்டு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.