TamilsGuide

என்னை அறிந்தால் To வணங்கான் - 10 வருட தொடர் முயற்சியின் வெற்றி - அருண் விஜய் HAPPY

2015 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் மற்றும் அருண் விஜய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது என்னை அறிந்தால் திரைப்படம். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விக்டர் என்ற கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்து இருந்தார். இந்த கதாப்பாத்திரம் மக்களிடம் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. இத்திரைப்படம் அருண் விஜய்-க்கு முக்கியமான , கம்பேக் திரைப்படமாக அமைந்தது. அப்படத்தை தொடர்ந்து தடையேற தாக்க, குற்றம் 23, தடம் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் படத்தை ரசிகர்களுடன் பார்த்துவிட்டு அவர்கள் கொடுத்த அன்பின் வெளிப்பாடாக திரையரங்கில் இருந்து வெளிவரும் போது மகிழ்ச்சியில் அழுதுக் கொண்டே வருவார். அந்த காணொளி அப்பொழுது மிகவும் வைரலானது.

இன்று 10 வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியானது வணங்கான் திரைப்படம். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேப்போல் படத்தின் முதல் காட்சியை குடும்பத்துடன் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது மிகவும் எமோஷனலாகவும் மகிழ்ச்சியாகவும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் அருண் விஜய்க்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. அருண் விஜயின் நடிப்பை வெகுஜன மக்கள் பாராட்டி வருகின்றனர். இதுப்போல் ஒரு கதாப்பாத்திரத்தில் அவரின் திரைப்பயணத்தில் நடிக்காதது குறிப்பிடத்தக்கது.

என்னை அறிந்தால் படத்தில் இருந்து 10 வருட தொடர் முயற்சியின் பலனாக இந்த படத்தின் வெற்றி அருண் விஜய்-க்கு கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அருண் விஜய் இதேப் போல் வெற்றி திரைப்படம் அமைய வாழ்த்துகிறோம்.
 

Leave a comment

Comment