1994-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் 'காதலன்'. இப்படத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
இப்படத்தின் கதைக்களம், காமெடி, பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்...' என்ற பாடல் இன்றைய காலக்கட்டத்திலும் காதலர்கள், இளைய தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதற்கு வைரமுத்துவின் பாடல் வரிகளும், அந்த பாடலை பாடிய பாடகர் உன்னி கிருஷ்ணனின் குரலும் தான். பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு இந்த பாடல் தான் சினிமாத்துறையில் அவர் பாடிய முதல் பாடல். இவரை சினிமாதுறைக்கு அழைத்து வந்தவர் ஏ.ஆர். ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பாடகர் உன்னி கிருஷ்ணன், நடிகர் பிரபுதேவாவுடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கூறியிருப்பதாவது:-
நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது. சினிமாவில் என்னுடைய முதல் பாடலான 'என்னவளே' பாடலைப் பிரபுதேவாவின் படத்தில்தான் பாடினேன். ஆனால், இந்த 30 வருடத்தில் அவருடன் நான் எடுக்கும் முதல் புகைப்படம் இதுதான் என்று தெரிவித்து உள்ளார்.
இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.