TamilsGuide

வாழ்க்கை என்றால் என்ன? ஏ.ஆர். ரகுமான் கொடுத்த நச் பதில்

உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளையும் ஏ.ஆர். ரகுமான் நடத்தி வருகிறார்.

இரண்டு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரகுமான் தன்னை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதில்களை அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஏ.ஆர். ரகுமான் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசும் போது, "முதலில் இந்த வாழ்க்கை நிரந்தரமான ஒன்றில்லை. விமான நிலையங்களில் உள்ள லாவுஞ்ச் போலத் தான் வாழ்க்கை. லாவுஞ்சில் இருந்து வேறொரு நாட்டிற்கு செல்கிறோம். அந்த பயணத்தை நினைக்கும் போது மனம் லேசாகிறது. தொல்லைகளும் தொடர்ச்சியாக இருக்காது, நல்லதும் நிரந்தரமாக இருக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்."

"வெறுப்பு, பொறாமை, கவலை மற்றும் சோகம் இவை அனைத்தையும் தூக்கி எறியும் போது நாம் நன்றாக உணர்வோம். சுக, துக்கத்தில் இருந்து தள்ளி நிற்க வேண்டும். சிறுவயதில் என் தந்தை இறந்துவிட்டார், அதன்பிறகு என் பாட்டி இறந்துவிட்டார், நான் வளர்த்த நாய்க்குட்டி இறந்துவிட்டது. எல்லாமே போன பிறகு எதுவும் நிலையில்லை என்று நினைத்தேன். நமக்கு எதை பிடித்திருந்தாலும், அது நம்மை விட்டு போய்விடுகிறது."

"சிறுவயதில் நான் மிக ஆசையாக ஒரு உபகரணம் வாங்கினேன். பிறகு, அது எப்போது எனக்கு வினியோகம் செய்யப்படும் என்று ஆவலோடு காத்திருந்தேன். பிறகு, அதில் இருந்து என் கவனம் சிதைந்தது. மறுநாளே எனக்கு அந்த உபகரணம் வந்துசேர்ந்தது. இது கடவுளால் கொடுக்கப்படும் பயிற்சியாக பார்க்கிறேன். தள்ளி இருக்கும் போது எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது," என்று தெரிவித்தார்.
 

Leave a comment

Comment