2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் டொனால்டு டிரம்ப் தன்னுடன் தொடர்பு வைத்திருந்தார் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்டாா்மி டேனியல்ஸ் மேலும் வாய் திறந்தால் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதிய டொனால்டு டிரம்ப், தன்னுடன் இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக நடிகைக்கு 1.3 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11 கோடி) வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவன கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதவிர, தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்த ஆதரவாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டொனால்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியூயாா்க்-இல் உள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.
அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில், குற்ற வழக்கில் டொனால்டு டிரம்புக்கான தண்டனை வருகிற வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் எம். மொ்சன் தண்டனையை அறிவிக்க இருக்கிறார்.
நீதிபதி ஜுவான் எம். மொ்சன் தண்டனையை அறிவிக்க தடைவிதிக்க வேண்டும் என நியூயார்க் நீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நியூயார்க் நீதிமன்றம் டொனால்டு டிரம்ப் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த தண்டனை அறிவிக்க தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கு அரசு தரப்பில் நாளை காலை பதில் மனுதாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதி ஜுவான் எம். மொ்சன், டிரம்பிற்கு சிறைத் தண்டனை வழங்கப்படாது. அபராதம் போன்றவை வழங்கப்படும் எனத்தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.