பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வாழை திரைப்படம் பெருமளவு வெற்றிப்பெற்றது. தேவரா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் .தற்பொழுது மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அதில் கலந்துக் கொண்ட நடிகர் கலையரசன் சில விஷயங்களை செய்தியாளர்களிடன் கூறினார்.
"நான் இதுக்கு மேல் அதிகமான கேரக்டர் கதாப்பாத்திரங்கள் நடிக்கப் போவதில்லை. அதற்கு காரணம் தமிழ் சினிமா என்னை சரியாக ட்ரீட் செய்யவில்லை என உணர்கிறேன். நான் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடிக்க தயார். நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் நான் நடித்த குணச்சித்திர கதாப்பாத்திரங்களே. நான் அதை எப்பொழுதும் மறக்க மாட்டேன். உதாரணத்திற்கு மலையாள சினிமாவை எடுத்துக்கொண்டால் அங்கு நடிகர்கள் பல கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லனாக ஒரு படத்தில் மற்றொரு திரைப்படத்தில் கதாநாயகனாக.என நடிக்கின்றனர். ஆனால் இப்பொழுது தமிழ் திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரம் நடித்தால். தொடர்ந்து எனக்கு அதேப் போல் கதாப்பாத்திரமே வருகிறது. படத்தில் சாகும் கதாப்பாத்திரம் இருந்தால் அதை எழுதும் போதே என் பெயரை எழுதி விடுவார்கள் போல... இந்த குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடிப்பதால் நான் இன்னும் இரண்டாம் கட்ட நடிகனாகவே பார்க்கப்படுகிறேன் அது எனக்கு வேதனை அளிக்கிறது. இதனால் நான் இனிமேல் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்களத்தில் மட்டுமே குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளேன்" என கூறினார்.