TamilsGuide

அனிருத்-க்கு ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த அட்வைஸ்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 14-ந்தேதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் அனிருத், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், "அனிருத் நன்றாக இசையமைக்கிறார். இவ்வளவு பெரிய படத்துக்கு ஹிட் கொடுக்கிறார். 10000 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள், அதில் நிலைத்து நிற்பது என்றால் திறமை இல்லாமல் நடக்காது. அதெல்லாம் செய்துவிட்டு தைரியமாக நின்று சொல்கிறார்... "தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான்" என்று சொல்லும் அந்தப் பணிவு கண்டிப்பாக வேண்டும். உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் க்ளாசிகல் இசை படித்துவிட்டு, அதில் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அதை நீங்கள் செய்தால் இளம் தலைமுறையினருக்கு அந்த இசை போய் சேரும் என்றார்.

ஏ.ஆர்.ரகுமான் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment