கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அவரது பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சந்தித்தார். அவருக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். இதையடுத்து பதவி விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கனடாவின் புதிய பிரதமராக யார் தேர்வு செய்யப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. பிரதமர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உள்பட 8 பேர் உள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது. இவரது தந்தை ஆனந்த் தமிழ்நாட்டையும், தாய் சரோஜ் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் டாக்டர்கள்.
அனிதா ஆனந்த் 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக இருந்தார். கொரோனா காலத்தில் கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தில் மருத்துவ உபகரணங்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்காற்றினார்.
அதேபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான ஜார்ஜ் சாகல், பிரதமர் பதவி போட்டியில் உள்ளார். இவர் இயற்கை வளங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராகவும், சீக்கிய காக்கசின் தலைவராகவும் உள்ளார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு துணைப் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கிறிஸ்டியா பிரீலேண்ட், முன்னாள் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, மூத்த அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், முன்னாள் பேங்க் ஆப் கனடா மற்றும் பேங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னி மற்றும் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், கிறிஸ்டி கிளார்க் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார். 57 வயதாகும் அனிதா ஆனந்த் 2010-ம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டவியல், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் சட்டம், தொடர்ந்து டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் பயின்ற அவர் நோவாஸ்கோர்சியாவில் பிறந்தவர்.