TamilsGuide

கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணிலில்லை மனசில்

கன்னியாகுமரி சென்று
வரும்வழியில்
என் நீண்டநாள் 
ஆசையொன்றை
நிறைவேற்றிக்கொண்டேன்

நாகர்கோயிலுக்குள் புகுந்து
ஒழுகினசேரி எங்கே
என்று விசாரித்தேன்

அங்கு வந்ததும்
கலைவாணர் வீடு எங்கே
என்று வினவினேன்

நான் காணவிரும்பிய
கலைவாணர் வீடு
கலைந்த கூடுபோல்
சிதைந்து கிடந்தது

1941இல் கட்டப்பட்டு
‘மதுரபவனம்’ என்று 
பெயரிடப்பட்ட மாளிகை
ஓர் உயரமான நோயாளியாக
உருமாறிக் கிடந்தது

இந்த மண்ணின்
பெருங்கலைஞர் கலைவாணர்

நடித்து நடித்துச்
சிரிக்க வைத்தவர்;
கொடுத்துக் கொடுத்தே
ஏழையானவர்

அந்த வளாகத்தில்
ஒரு நூற்றாண்டு நினைவுகள்
ஓடிக் கடந்தன

எத்துணை பெரிய
கனவின் மீதும்
காலம் ஒருநாள்
கல்லெறிகிறது

கலைஞர்களின்
நிஜமான நினைவிடம் என்பது
மண்ணிலில்லை;
மனசில்

வைரமுத்து
@Vairamuthu
#NSKalaivanar
https://x.com/Vairamuthu/status/1874644590197702838?t=4hioM_IeqESwc3eI-MfHSQ&s=19
 

Leave a comment

Comment