சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்தின் டைட்டில் டீசர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தினமான இன்று படத்தின் போஸ்டரை வெளியிட்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


