TamilsGuide

உயிரிழக்கும் முன் கறுப்பின கைதியை மரணஅடி அடித்து சித்ரவதை செய்த போலீஸ் 

அமெரிக்காவின் நியூ யார்க் சிறையில் கைதி ஒருவரை போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட அடுத்த நாளே அந்த கைதி உயிரிழந்தார்.

மற்ற சில அதிகாரிகளில் உடையில் பொருத்தப்பட்ட பாடி கேம் கேமராவில் பதிவான அந்த வீடியோவில் கறுப்பின நபரான அவரை போலீஸ் அதிகாரிகள் கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான கைதி 43 வயதான ராபர்ட் ப்ரூக்ஸ் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மார்சி கரெக்ஷனல் ஃபெசிலிட்டியில் வைத்து அதிகாரிகளால் தாக்கப்பட்டார்.

கைவிலங்கிடப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனை மேசையில் அமரவைக்கப்பட்டார். அவரது வாயில் போலீசார் துணி போன்ற எதையோ திணித்தனர். அதன்பின் அதிகாரிகள் புரூக்ஸின் முகம் மற்றும் இடுப்பில் அடித்தனர். ஒரு கட்டத்தில், ஒரு அதிகாரி ஷூவைப் பயன்படுத்தி ப்ரூக்ஸின் வயிற்றில் அடித்தார், மற்றொருவர் அவரை கழுத்தைப் பிடித்து மேசையில் தள்ளினார்.

சிறிது நேரம் கழித்து, அவர்கள் அவரது சட்டை மற்றும் பேண்ட்டைக் கழற்றினர். இதன்பின் புரூக்ஸ் அசைவற்றுக் கிடந்தார். இதற்கு மறு நாள் டிசம்பர் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் ப்ரூக்ஸ் வழக்கை விசாரித்து வரும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ், இந்த கேமரா காட்சிகளை நேற்று [வெள்ளிக்கிழமை] வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 13 அதிகாரிகள் மற்றும் சிறை உதவியாளர் ஒருவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

உயிரிழந்த ராபர்ட் ப்ரூக்ஸ், 2017 ஆம் ஆண்டில் மன்ரோ கவுண்டியில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார். 

Leave a comment

Comment