ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்ட சபையில் பேசினார். அப்போது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த திரைப்படங்களுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் பஞ்சாரா ஹில்ஸ் காமண்ட் கண்ட்ரோல் மையத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தனர். இதில் நடிகர் அல்லுஅர்ஜூன் கைது விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.
தெலுங்கு திரைத்துறையினரிடம் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சி அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் மருத்துவ செலவுக்கு அல்லு அர்ஜுன் சார்பில் ரூ.1 கோடியும் புஷ்பா படக்குழு சார்பில் ரூ.50 லட்சமும் படத்தின் இயக்குநர் சார்பில் ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இந்நிலையில், அல்லு அர்ஜுனை மூத்த தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான தம்மரெட்டி பரத்வாஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஒரு நபரின் (அல்லு அர்ஜுன்) ஈகோ மற்றும் தவறு காரணமாக ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன் தலைகுனிந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சினிமா ஹீரோக்களை ரசிகர்கள் கடவுளாகக் கருதுகிறார்கள். ஹீரோக்கள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் கான்வாய்களில் பயணிப்பதும் ரோட்ஷோ நடத்துவதும் அதிகரித்து வருகிறது. ஒரு படம் பார்த்துவிட்டு அதிக ஆரவாரம் இல்லாமல் திரும்பினால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது.
முன்பு, ஹீரோக்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா போன்ற பழம்பெரும் நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களுடன் அடிக்கடி படங்களைப் பார்த்திருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு திரும்புவார்கள். அந்த இடத்தில் இருக்கும் ரசிகர்களுடன் சிறிது நேரம் பேசுவார்கள். பிறகு அவர்கள் வேறு தியேட்டருக்கு செல்வதாக இருந்தால் அதை அறிவிக்காமல் செய்வார்கள்.
ஆனால் இப்போது, ஒரு ஹீரோ எங்கே இருப்பார் என்பதை சமூக ஊடகங்கள் தெரியப்படுகின்றன. அதனால் ஹீரோக்கள் வருவதற்கு முன்பே அவர்களைப் பார்க்க பெரும் கூட்டம் அங்கு வந்துவிடுகிறது.
பிரபலங்கள் தங்களது ரசிகர்களைப் பற்றி மட்டுமின்றி, பொதுமக்களின் நலனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர்களின் நடிப்பு பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
ஹீரோக்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள் தான் என்பதை நினைவில் வைத்திருந்தால், அவர்களின் செயல்பாடுகளால் இவ்வளவு குழப்பம் ஏற்பட்டிருக்காது" என்று தெரிவித்தார்.