TamilsGuide

பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்

யாழ்  மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால் நேற்று முன்தினம்  திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்பட்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” யாழ்ப்பாணம் கடந்த காலங்களில்  மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. எனினும்  தற்போது  மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றது. எனவே யாழ்ப்பாணத்தைத்  தூய்மையான அழகான நகரமாக மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

இந்த மீன் சந்தை மிகவும் கஷ்டப்பட்டுக்  கட்டியதாகக் கூறினார்கள். இதை எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகின்றோம் என்பதில்தான் எமது  வெற்றி தங்கியிருக்கின்றது.

இது உங்களுக்குரிய கட்டிடம். இதை தூய்மையாக வைத்துப் பராமரிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. நீங்கள் அவ்வாறு பராமரிப்பீர்களாக இருந்தால் அதிகளவு நுகர்வோர்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது” இவ்வாறு  ஆளுநர்  தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment