கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர, ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சியாக இருந்த கட்சி ஒன்றின் தலைவர் திட்டமிட்டுள்ளார்.
அதனால், கனடாவில் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது!
New Democratic கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங், ஜனவரி மாதம் 27ஆம் திகதி, மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது, ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகவேண்டுமென கனடாவில் கோரிக்கை வலுத்துவருகிறது.
கனடாவில் அடுத்த பொதுத்தேர்தல் 2025ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்பட உள்ளது.
அப்படி தேர்தல் நடைபெற்றால், தேர்தலில் ஆளும் ட்ரூடோவின் லிபரல் கட்சி படுதோல்வி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழல் நிலவும் நிலையில், திடீரென ஜக்மீத் சிங் கட்சி, ட்ரூடோ மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
ஜக்மீத் சிங் நேற்று இது தொடர்பாக வெளியிட்ட கடிதத்தில், ஒரு பிரதமராக, மக்களுக்காக பணியாற்றவேண்டும், பலம் படைத்தவர்களுக்காக அல்ல என்னும் மிகப்பெரிய பணியில் ஜஸ்டின் ட்ரூடோ தோற்றுவிட்டார்.
ஆகவே, அவரது அரசைக் கவிழ்க்க NDP கட்சி வாக்களித்து, கனேடியர்கள் தங்களுக்காக உழைக்கும் ஒரு அரசைக் கொண்டு வருவதற்காக வாக்களிக்க வாய்ப்பை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆக, ஜக்மீத் சிங் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்குமானால், அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களில் கனடாவில் ட்ரூடோ அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.