பிரான்ஸ் நாட்டில், தன் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவர் சுயநினைவில்லாமல் இருக்கும்போது பல ஆண்களைக் கொண்டு , அவரை சொந்த கணவரே சீரழிக்க உதவிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டையே உலுக்கிய அந்த வழக்கில், அந்த மோசமான கணவருக்கும், அவரது மனைவியை சீரழித்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து 51 பேருக்கு இரையாக்கிய நபர்
பிரான்ஸ் நாட்டு போர் வீரர் ஒருவரின் மகள் ஜிசெல் பெலிகோட் (Gisèle Pelicot, 72). ஜிசெலின் கணவர் டொமினிக் (Dominique Pelicot, 71).
ஜிசெலுக்கு சில உடல் நல பாதிப்புகள் இருந்துள்ளன. அதற்காக அவர் மருந்துகள் எடுத்துவந்துள்ளார்.
தனக்கு மறதி பிரச்சினை அல்லது மூளையில் ஏதாவது பிரச்சினை இருக்குமோ என ஜிசெலுக்கு சந்தேகம் வந்துள்ளது.
ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு அந்த பிரச்சினைகள் இல்லை என தெரியவந்துள்ளது.
கணவர் ஒருவேளை தனக்கு மயக்க மருந்துகள் கொடுக்கிறாரோ என சந்தேகம் ஏற்பட, கணவரிடமே கேட்டுள்ளார் ஜிசெல். தான் அப்படி எதுவும் செய்யவில்லை என மறுத்துள்ளார் டொமினிக்.
2020ஆம் ஆண்டு, ஒரு நாள் பல்பொருள் அங்காடிக்குச் சென்ற டொமினிக், பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் தனது மொபைலில் மோசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கையும் களவுமாக டொமினிக் சிக்க, பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, டொமினிக்கின் கணினியை பொலிசார் ஆராய்ந்துள்ளார்கள். அப்போது, மிகப்பெரிய பயங்கரம் ஒன்று தெரியவந்தது.
அந்த கணினியில் ஏராளமான வீடியோக்கள் இருந்துள்ளன. அவை அனைத்தும், டொமினிக்கின் மனைவியாகிய ஜிசெலை பல ஆண்கள் சீரழிக்கும் காட்சிகள்!
ஆம், ஜிசெல் சந்தேகப்பட்டதுபோலவே, ஜிசெலின் மாத்திரைகளுடன் தூக்க மாத்திரைகளைக் கலந்தும், மயக்க மருந்துகளைக் கலந்தும் இருக்கிறார் டொமினிக்.
ஜிசெல் மயக்க நிலையில் இருக்கும்போது அவரை சீரழித்த டொமினிக், இணையம் வாயிலாக ஆண்களை வரவழைத்து தன் மனைவியை சீரழிக்க வைத்து, அந்தக் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துவைத்துள்ளார்.
2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, சுமார் 83 ஆண்கள், 92 முறை ஜிசெலை சீரழித்துள்ளார்கள்.
கணினியில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஜிசெலின் கணவரான டொமினிக்கும், ஜிசெலை சீரழித்தவர்களில் 51 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
டொமினிக்குக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜிசெலை சீரழித்த மற்றவர்களுக்கு 5 முதல் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மோசமான செயலை செய்தவர்களை சிறைக்கு அனுப்பியதால், இத்தனை ஆண்டுகளாக தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமலே கொடுமைகளை அனுபவித்து வந்த ஜிசெலுக்கு உண்மையாகவே நீதி கிடைத்துள்ளது என கருதமுடியுமா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.


