30 ஆண்டுகளை வெற்றிகரமாகத் தொடும் செந்தியின் தமிழன் வழிகாட்டிக் கனடா வன்னிச் சங்கம் வாழ்த்து...
கனடா
கனடா மண்ணில் கால்பதித்து 30 ஆண்டுகளை வெற்றிகரமாகத் தொட்டு நிற்கின்ற தமிழன் வழிகாட்டி விளம்பரக் கையடக்க திரட்டுக்கு வாழ்த்துரை வழங்குவதில் கனடா வன்னிச் சங்கம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது. தமிழர்களால் புதிதாக உருவாக்கப்படுகின்ற வர்த்தக நிறுவனங்களை தமிழர்களது வாசல்படியில் அறிமுகப்படுத்துவதிலும், அனைத்து வர்த்தக நிறுவனங்களது விளம்பரத் தகவல்களைப் பொக்கிசமாக வைத்திருந்து தமிழர்களுக்கு உதவி செய்வதிலும் தமிழன் வழிகாட்டிக்கு நிகர் வேறேதும் இல்லை என்றே கூறலாம். ஆரம்ப காலங்களில் சிறயதோர் கையேடாக வெளிவந்த இந்த வர்த்தகத் திரட்டானது இன்று பருத்துக் கொழுத்து கைக்கு அடங்காத புத்தக வடிவில் வருவதனையிட்டு அனைத்துத் தமிழ் மக்களும் பெருமை கொள்கின்றார்கள்.
இந்தத் தமிழன் வழிகாட்டி வர்த்தகத் திரட்டு நூலானது தனியே வர்த்தகர்களின் விபரங்களைக் கொடுக்கின்ற ஒரு நூலாக மட்டும் அமையவில்லை. பல்வேறுபட்ட நோக்கங்களைக் கொண்ட மக்களுக்கும் பயன்படத்தக்க வகையில் விபரங்களைத் திரட்டிக் கொடுக்கின்ற ஒரு நூலாகவும் இது உள்ளது. உதாரணமாக கனடாவில் இயங்குகின்ற கிராம அல்லது ஊர்ச்சங்கங்களது தொடர்பு இலக்கங்கள், கோவில்களது தொடர்பு இலங்கங்கள், உலகப் புகழ்பெற்ற இடங்களது தொடர்புகளுக்கான தகவல்கள் கனடா அரசாங்கத்தின் அல்லது மாகாண அல்லது நகரசபையினது முக்கிய தகவல்களைப் பெறுவதற்கான தொடர்பு இலக்கங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் தருகின்ற ஒரு வழிகாட்டியாக தமிழன் வழிகாட்டி தமிழர் மத்தியில் உலாவருவது போற்றுதற்கு உரிய ஒன்றாகும்.
இவ்வாறாக வர்த்தகம் மாத்திரமன்றி பல்துறை சார் தகவல்களையும் இலகுவாகத் தரக்கூடிய தமிழன் வழிகாட்டி கனடா மண்ணில் நீடூழிகாலம் நிலைத்து வாழ வேண்டுமென்று இதயபூர்வமாக கனடா வன்னிச் சங்கமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இயக்குனர் சபை 2024/2025,
வன்னிச் சங்கம். - கனடா






















