TamilsGuide

அதிபர் புதினை சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசு முறை பயணமாக ரஷியா நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தியா - ரஷியா இடையிலான ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டம் நிறைவுற்ற பிறகு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்து பேசினார். ரஷிய அதிபர் புதின் மற்றும் அமைச்சர் ராஜ்நநாத் சிங் இரு நாடுகள் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும் பிரதமர் மோடி சார்பில் அதிபர் புதினுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக பிரதமர் மோடி ரஷிய பயணம் மேற்கொண்டு அதிபர் புதினை சந்தித்த நிலையில், தற்போது பாதுகாப்பு அமைச்சர் அங்கு பயணம் மேற்கொண்டு இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது, "நமது நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மிக உயர்ந்த மலையை விட உயர்ந்தது மற்றும் ஆழமான கடலை விடவும் ஆழமானது. இந்தியா தனது ரஷிய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் இது நிச்சயம் தொடரும்," என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment