அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சிறைக் கைதி நர்கிஸ் - முதல் முறையாக பொதுவெளியில் பேசிய வீடியோ
ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்ப்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி [52 வயது] கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பின்னர் முதல் முறையாக சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் வெளியே வந்துள்ளார் நர்கிஸ் முகமதி. எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ காரணங்களுக்காக மூன்று வாரங்கள் சிறையில் இருந்து கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
அவரை நோபல் பரிசுக் குழு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] தொடர்பு கொண்டு பேசியுள்ளது. இந்த உரையாடலில் வீடியோவை நோபல் பரிசு குழு பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.
எனது சக கைதிகளில் ஒருவர் சிறையில் ஆண்கள் வார்டில் இருந்த தனது கணவரை தொடர்புகொண்டார். அவர்கள் மூலம் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற செய்தியை அறிந்துகொண்டோம். அது நம்பமுடியாத-தாக இருந்தது
எவின் சிறைச்சாலை முழுவதும் இந்த செய்தி பரவியபோது பெண்கள் வார்டு "பெண் வாழ்க்கை சுதந்திரம்"[Woman Life Freedom] என்ற முழக்கத்தால் நிறைந்ததை முகமதி அந்த வீடியோவில் நினைவு கூர்ந்தார். இந்த வீடியோவில் பச்சை நிற டாப்ஸ் அணிந்திருந்த முகமதி தலையில் எந்தவித உடையையும் [ஹிஜாப்] அணியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முகம்மதியின் நிபந்தனையற்ற நிரந்தர விடுதலைக்கு உளமெங்கிலும் இருந்து சமூக செயல்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.






















