ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்து கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. தரைவழி தாக்குதலையும் தொடங்கியது.
இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டை அதிகமானது. அடிக்கடி இஸ்ரேல் தாக்குவதும், ஹிஸ்புல்லா பதில் தாக்குதல் நடத்துவதுமாக இருந்தது.
இந்த நிலையில்தான் இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன.
இதற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இஸ்ரேல் அரசின் கீழ் இயங்கி வரும் அதிக அதிகாரம் படைத்த பாதுகாப்பு கேபினட் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமல் படுத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில் "லெபனானில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து போர் நிறுத்த நாட்கள் நீடிப்பது அமையும். நாங்கள் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம். எதாவது மீறல் நடைபெற்றால் பதிலடி கொடுப்போம். பெற்றி பெறும் வரை நாங்கள் ஒன்றுபட்டு இருப்போம்.
ஹமாஸை அழித்தொழிக்கும் பணியை முடிப்போம், பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவோம், காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வோம், மேலும் வடக்கில் வசிப்பவர்களை பாதுகாப்பாக வீடு திருப்புவோம்.
வடக்கில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவது உட்பட அதன் அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போர் முடிவுக்கு வராது. அது தெற்கில் நடந்தது போல் நடக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்" இவ்வாறு நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.