கடந்த காலங்களில் மக்களால் வெறுக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் ஒரு உன்னதமான இடமாக மாற்றுவதற்கு, அனைத்து உறுப்பினர்களும் தாம் மக்கள் பிரதிநிதிகள் என்பதை நினைவில் வைத்து வேலை செய்ய வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
10 ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல்
செயலமர்வு இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”நாம் இந்த பாராளுமன்றத்தில் எதற்காக இருக்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் அதிக பெண் பிரதிநிதித்துவத்துடன் 22 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். 225 இடங்களில், 162 இடங்கள் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்பட்டன.
புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றம் என்று அழைக்கப்படும் இந்த உயர் மன்றம் கடந்த காலங்களில் மக்கள் வெறுப்பை பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட்டனர். 225 பேரும் ‘தேவைஇல்லை’ என்று மக்கள் கருதினார்கள்.
இதுபோன்ற கருத்துக்களின் அடிப்படையில், மக்கள் இந்த பாராளுமன்றத்தை பொதுத் தேர்தலிலினுடாக உருவாக்கினரகள். எனவே நாம் பொதுமக்களின் பிரதிநிதிகள் என்பதை மறந்துவிடக் கூடாது. அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகள் எதுவாக இருந்தாலும், நாம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” இவ்வாறு பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.