அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்களின் வாழ்க்கைத் துணையை ஏமாற்றுவோர் இனி சட்டப்படி தண்டிக்கப்படமாட்டார்கள் என கூறப்படுகின்றது.
ஆளுநர் கெத்தி ஹோச்சல் நவம்பர் 22ஆம் தேதி இது தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டார். முன்னதாக, நியூயார்க்கில் திருமணமானவர்கள் கள்ள உறவு வைத்திருந்தால் அது குற்றமாகும்.
குற்றம் புரிவோருக்கு மூன்று மாதங்கள் வரை சிறை
1907ஆம் ஆண்டு முதல் நடப்பில் உள்ள இந்தச் சட்டத்தின்படி, குற்றம் புரிவோருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
வீட்டில் கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்க, ஒருவர் வேறொருவருடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டால் அது தவறான நடத்தை தொடர்பான ‘பி’ வகை குற்றமாகக் கருதப்பட்டது.
இதன் தொடர்பாக 1972ஆம் ஆண்டு தொடங்கி 13 பேர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் ஐவரது குற்றம் நிரூபணமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய திருமதி ஹோச்சல், இத்தகைய விவகாரங்கள் அந்தந்த நபர்களால் கையாளப்பட வேண்டுமே தவிர, நமது குற்றவியல் நீதி அமைப்பால் அல்ல என்றார்.