TamilsGuide

உயிர் அச்சுறுத்தல் காரணமாக இடமாற்றம் கோரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதனால் உடனடியாக வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அண்மையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதிக் கோரி அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், மகப்பேற்று விடுதிக்குள் நுழைந்த குழுவொன்று வைத்தியசாலையின் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து தாம் நிலைமை குறித்து விவாதிக்கவும், வருகை தந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பொலிஸாரின் உதவியை நாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த குழுவினர் தம்மைத் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த முற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கடந்த 20ஆம் திகதி சிலர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவுக்குள் நுழைந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் இடம்பெறுவதாகவும் சிலர் உயிர் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தமக்கு வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற பணிச் சூழல் நிலவுவதனால் உடனடியாக இடமாற்றம் வழங்குமாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தமக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் அவர் மன்னார் பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளார்.

இதேவேளை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுகாதார அமைச்சின் இரண்டு குழுக்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளன.

அதேநேரம், வடமாகாண சுகாதார அமைச்சின் ஊடாக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.பத்திரன தெரிவித்தார்.
 

Leave a comment

Comment