TamilsGuide

இம்ரான்கான் மேலும் ஒரு வழக்கில் கைது- மற்றொரு வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிரடி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதில் பல வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.

அந்த வகையில் அரசு கருவூலத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் தோஷகானா வழக்கில் இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது. எனினும் இம்ரான்கான் மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இந்த நிலையில் தோஷகானா வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே மற்றொரு வழக்கில் இம்ரான்கானை போலீசார் கைது செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிப் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக இம்ரான்கான் மீது பயங்கரவாதம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment