ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகள் தங்கள் மக்களிடம் போருக்கு தயாராக இருக்கும் படி அறிவுறுத்தி வருகிறது. சமீபத்தில் தான் ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஆயிரமாவது நாளை கடந்தது. இதனிடையே ஸ்வீடன், பின்லாந்து, நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் தங்களது நாட்டினருக்கு ஆபத்து காலத்தில் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
இது தொடர்பாக ஸ்வீடன் மில்லியன் கணக்கான துண்டுப்பிரசுரங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. அவற்றில் போர், இயற்கை பேரழிவுகள் மற்றும் சைபர் அல்லது பயங்கரவாத தாக்குதல்களுக்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பது பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருந்துள்ளது. பின்லாந்து பல்வேறு நெருக்கடிகளுக்கான தயார்நிலை குறித்த தகவல்களை சேகரிக்கும் வலைத்தளத்தை தொடங்கியுள்ளது.
ஸ்வீடன் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "இராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மோசமான சூழ்நிலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் - ஸ்வீடன் மீதான ஆயுதமேந்திய தாக்குதலுக்கு" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
'நெருக்கடி அல்லது போர் வந்தால்' என்ற 32 பக்க சிறு புத்தகத்தில், கெட்டுப்போகாத உணவு மற்றும் தண்ணீரை சேமித்து வைப்பது, கையில் பணத்தை வைத்திருப்பது மற்றும் தோட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பது போன்ற குறிப்புகள் உள்ளன.
"ஸ்வீடனை வேறொரு நாடு தாக்கினால், நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம். எதிர்ப்பை நிறுத்த வேண்டும் என்பதற்கான அனைத்து தகவல்களும் தவறானவை" என்று சிறு புத்தகத்தில் ஒரு வரி கூறுகிறது.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஸ்வீடன் ஐந்து முறை வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். புதிய பதிப்பில் ரஷ்யா, உக்ரைன் அல்லது வேறு எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை.
துண்டு பிரசுரம் ஸ்வீடிஷ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. இதன் டிஜிட்டல் பதிப்புகள் அரபு, ஃபார்ஸி, உக்ரைனியன், போலிஷ், சோமாலி மற்றும் ஃபின்னிஷ் உட்பட பல மொழிகளில் கிடைக்கின்றன.
பின்லாந்தின் இணையதளம் அதிகாரிகள் "தற்காப்புக்காக நன்கு தயாராக உள்ளனர்" என்று வலியுறுத்துகிறது. பின்லாந்து நாடு ரஷியாவுடன் 1,340 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடர்ந்த பிறகு, பின்லாந்து 200-கிலோமீட்டர் எல்லைப் பகுதி வேலியை 10 அடி உயரம் மற்றும் முட்கம்பிகளால் கட்டும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு முடிக்கப்பட உள்ளது.