TamilsGuide

அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்ய திட்டம் - குண்டைத் தூக்கிப் போட்ட டிரம்ப்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

இவர் கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஆவார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோதமான குடியேறிகள் மீது கடுமையான போக்கை டிரம்ப் கையாண்டார்.

தொடர்ந்து அமைந்த ஜோ பைடன் ஆட்சியில் சற்று தளர்வான சூழல் நிலவிய நிலையில் தற்போது டிரம்ப் மீண்டும் பதவியேற்றுள்ளது விஷயத்தை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே சட்டவிரோத குடியேற்றம் குறித்து அதிகம் பேசினார்.

சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்சிகோவுடனான எல்லையை உறுதி செய்து நாட்டை பாதுகாப்பேன் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று ட்ரூத் என்ற சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், 'அது உண்மைதான்' என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களைப் பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது
 

Leave a comment

Comment