நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி நவம்பர் 14 ஆம் தேதி வெளியான படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுக்க 38 மொழிகளில் அதிக திரைகளில் இந்தப் படம் வெளியானது.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஒருசிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர்.
கங்குவா திரைப்படம் மூன்று நாட்களில் 127 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் நடித்த சூர்யாவை பலர் விமர்சித்து வரும் நிலையில், நடிகை ஜோதிகா மற்றும் சீனு ராமசாமி ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் உடன் பிறப்பே, நந்தன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சரவணன் நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது தவறு என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் "கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும் உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி இருக்கக்கூடும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்குக் கொந்தளிக்கும் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, சுரண்டல்களை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கடக்கிறோம்.
ஆட்சியில், நிர்வாகத்தில், அரசியல் நிலைப்பாடுகளில் நாம் க்யூவில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தவறு செய்கிற போது இத்தகைய ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறோமா? சினிமாவுக்கு எதிராக இவ்வளவு சீறுகிற நாம், நம் பகுதியின் கவுன்சிலரிடம் என்றைக்காவது முறையிட்டிருப்போமா?
வீட்டைச் சுற்றி தண்ணீர் நின்றாலும், கொசுக்கடி கொன்றாலும், பாதிச்சாமத்தில் கரண்ட் கட்டானாலும், சாலை நடுவே பள்ளம் உண்டாகி உருண்டாலும், நியாயமான விஷயங்களுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடி வந்தாலும், கண் முன்னே அநீதி நடந்தாலும் அதிகபட்சம் உள்ளுக்குள் குமுறிக்கொண்டே கடக்கிறோம். பிள்ளைகளின் கல்விச் செலவுக்குக் கொஞ்சமும் நியாயமின்றி வசூலிக்கப்படும் கட்டணத்தை கடன் வாங்கியாவது கட்டுகிறோம். உயிர்க் காக்கும் மருத்துவத்தில் நடக்கிற கொடுவினைகளைக்கூடச் சகித்துக் கொள்கிறோம். இந்த ஆவேசமும் கொந்தளிப்பும் அங்கெல்லாம் எப்படி அமைதியாகிறது? ஒரு படம் நம்மை ஏமாற்றுகிற போது பாய்கிற நாம், ஒரு நிஜம் நம்மை ஏமாற்றுகிற போது சகிக்கவும், தாங்கவும் எப்படி பழகிக் கொள்கிறோம்?
ஒரு பெரியவர் 'கங்குவா' படத்திற்கு எதிராகக் கொந்தளித்ததைக் காட்டாத சமூக வலைத்தளங்கள் இல்லை. ஆனால் இன்றைக்கும் சுற்றுச் சூழலுக்காக, சமூக நீதிக்காக, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனிதர்களை எத்தனை ஊடகங்கள் காட்டுகின்றன? ஒரு படத்தின் நல்லது கெட்டதுகளை போஸ்ட் மார்ட்டம் செய்து கிழித்துத் தொங்கவிட இவ்வளவு புரட்சியாளர்கள் இருக்கிற தமிழ்நாட்டில் நமக்காகக் கொண்டு வரப்படுகிற திட்டங்களை, செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்க, விவாதிக்க எத்தனை நாதிகள் இருக்கின்றன?
"சூர்யா ஏமாத்திட்டார்…" என ஆதங்கப்பட்ட / ஆத்திரத்தில் இன்னும் சில வார்த்தைகளைக் கொட்டிய ஒரு நண்பர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் 15 லட்சத்தைப் பறிகொடுத்தவர். எல்லோரும் இணைந்து கொடுத்த புகாரில் கையெழுத்துப் போட்டதைத் தவிர, அந்த நண்பர் காட்டிய எதிர்ப்பும், போராட்டமும் எதுவுமில்லை. நண்பரின் விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், நாமும் இப்படித்தான்…எத்தனையோ அநீதிகளை நெருக்கடிகளை மென்று செரிக்கிறோம். ஆனால், சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுகிறோம்.
"படத்தில் ஏன் இவ்வளவு வன்முறைக் காட்சிகள்" என ஆவேசப்படுகிற நாம், நம் கண் முன்னே நடக்கிற கத்திக் குத்துகளைக் கண்டுகொள்ள மாட்டோம். "படத்தில் ஏன் இவ்வளவு மது போதைக் காட்சிகள்?" என ஆவேசப்படுவோம். வரிசைகட்டி மீன் கடைகள் போல் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளைப் பார்த்துக்கொண்டே கடப்போம். படத்தில் எதுவும் தவறான காட்சிகள் வந்துவிடக் கூடாது. நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது என்ன மனநிலை?
நியாயமும் அறச்சீற்றமும் கேள்வி கேட்கும் திராணியும் கொண்ட ஒருவன், தனக்கு எதிராக நடக்கும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் கொந்தளிப்பான். ஓர் அநீதிக்கு அமைதியாகவும், இன்னோர் அநீதிக்கு புரட்சியாகவும் இருக்க மாட்டான்.
மூன்றே விஷயங்கள்…
1.சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை.
2.இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம். சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம். 3மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3. சில சண்டைகளில் என்ன ஏதென்றே தெரியாமல் போவோர் வருவோரும் சேர்ந்து அடிப்பதுபோல், பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள். உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி.
பி.கு: நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல…