நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவான கங்குவா திரைப்படம் நவம்பர் 14 அன்று வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இத்திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "கங்குவா மிகச்சிறந்த படம். நான் இதை சூர்யாவின் மனைவியாக கூறவில்லை. சினிமா ரசிகையாக சொல்கிறேன். ஒரு நடிகராக சினிமாவை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் சூர்யா. இந்திய சினிமாக்களில் தவறுகள் என்பது ஒரு பகுதிதான். 3 மணி நேர படத்தில் அரை மணி நேரம் மட்டுமே குறை உள்ளது. இப்படத்தின் சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முழுமையான சினிமா அனுபவத்தை கொடுக்கும் படம் இது.
பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் என அறிவுக்கு மாறாக எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த அளவிற்கு விமர்சனங்கள் வரவில்லை.
ஊடகங்களில் வெளியான எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்படம் சிறந்த ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டுள்ளது. கங்குவா படத்தின் 2ம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சியையும், கங்குவாவுக்கும் சிறுவனுக்கும் இடையிலான அன்பு, துரோகம் போன்ற நல்ல காட்சிகள் உள்ளது. படத்தை ரிவ்யூ செய்வதில் அவர்கள் நல்ல விஷயங்களை சொல்ல மறந்துவிட்டனர்.
இப்படத்தை 3டியில் உருவாக்க படக்குழு எடுத்த முயற்சிக்கு பாராட்டு கிடைக்க வேண்டிய நிலையில், படத்தின் முதல் ஷோ முடிவதற்கு முன்பே கங்குவா படத்திற்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது வருத்தமளிக்கிறது.
கங்குவா படக்குழு பெருமையாக இருங்கள். இப்படத்திற்கு எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேறு எதுவும் செய்யவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பாலிவுட் நடிகை ராதிகா மெஹ்ரா நடிகை ஜோதிகாவின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அந்த பதிவிற்கு நன்றி கூறிய ஜோதிகா, அத்துடன் பதில் கருத்து ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் படத்தின் வெற்றி, தோல்வியை பற்றி பேசவில்லை. வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ள நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறோம்.
நேர்மையான படைப்புக்கு எதிர்மறை விமர்சனங்கள் வருகிறது. ஆனால் அதே சமயம் தரமற்ற படங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க யாருக்கும் தைரியமில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.