TamilsGuide

புதிய நாடாளுமன்றில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும்! -ரஞ்சித் மத்தும பண்டார

நிறைவேற்று அதிகாரமுடைய மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய ஜனாதிபதி ஒருவர் அங்கம் வகிக்கும் பாரளுமன்றம் உள்ள ஒரு நாட்டில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும் எனவும் இச்  சவாலை எதிர்கொள்ளத் தாம் தயாராக உள்ளதாகவும்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து  ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி காணப்படுகின்றது.

எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் பல பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.ஏனெனில் நிறைவேற்று அதிகாரமுடைய மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய அதிகாரத்துடன் கூடிய பாரளுமன்றம் உள்ள ஒரு நாட்டில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும்.

அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்.இன்று இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. மக்கள் மூன்று வேளை உணவு உண்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பொருட்கள் விலை அதிகரிப்பு எரிபொருள் எரிவாயு விலை இவற்றை கருத்திற்கொண்டு இந்த நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் வழங்க தீர்மானித்தனர்.மக்களின் அந்த தீர்மானத்தினை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் நாட்டின் பொருளாதாரம் என அனைத்து விடயங்களும் அதில் தங்கியுள்ளது. நாம் அதனை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அதேபோல் மற்றுமொரு எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அதாவது கள்வர்களை பிடிப்பதாகவும் ஊழல்வாதிகளை கைது செய்வதாகவும் தேர்தல் மேடைகளிலகூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனவே அவர்கள் கள்வர்களை பிடிப்பதனையும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதனையும் மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். அரசாங்கம் கள்வர்களை பிடிப்பதற்கும் ஊழல்வாதிகளை கைது செய்வதற்கும் முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராகவே உள்ளோம்” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment