TamilsGuide

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மஹிந்தானந்த அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இன்று (16) நாவலப்பிட்டி மஹிந்தானந்த அளுத்கம அறக்கட்டளை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு தேவையில்லை என்பதை பொதுத்தேர்தல் நிரூபித்ததன் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அளுத்கமவின் தலைமுறையினர் ஏழு தசாப்தங்களாக நாவலப்பிட்டி தொகுதியில் தீவிர அரசியலில் ஈடுபட்டதாகவும், அதில் தாம் மூன்று தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வருட பொதுத் தேர்தலில் தாம் புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டதாகவும், வாக்காளர்கள் 20,401 வாக்குகளையே வழங்கியதாகவும் தெரிவித்தார்.

தனது அரசியல் பயணத்தின் போது தொடர்ச்சியாக பல்வேறு நபர்களாலும் ஊடகங்களாலும் தம்மை அவதூறாகப் பேசினாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு தனது தொகுதி வாக்காளர்களுக்காக அரசியலில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment