நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் வெளியான திரைப்படம் 'கங்குவா.' பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா படத்திற்கு ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. பலர் படம் பிடிக்கவில்லை என்றும் ஒருசிலர் படம் சுமார் தான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படம் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் படத்தில் 'ஒலி' தொந்தராக இருந்தது என்றும் தலை வலி வந்துவிட்டது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெளியீட்டுக்கு முன் இந்தப் படம் நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்று படக்குழு தொடர்ச்சியாக தெரிவித்து வந்தது.
இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தை பார்த்தவர்களில் பலர் படக்குழு எதிர்பார்க்காத கருத்துக்களையே தெரிவித்தனர். இந்த நிலையில், கங்குவா படத்தில் ஒலி சார்ந்த குற்றச்சாட்டு எழுப்பப்படுவது தொடர்பாக பிரபல ஒலி வடிவமைப்பாளரும், ஆஸ்கர் விருது வென்றவருமான ரசூல் பூக்குட்டி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், "இது போன்ற நமது பிரபலமான படங்களில் ஒலி பற்றிய விமர்சனத்தைப் பார்ப்பது மனவருத்தமாக இருக்கிறது. எங்கள் கலைத்திறனும் உரத்தப் போரில் சிக்கிக்கொண்டது. இது யார் குற்றம்? ஒலி வடிவமைப்பாளரா? அல்லது கடைசி நேரத்தில் எண்ணற்ற திருத்தங்களை சொன்னவர்களையா? ஒலி கலைஞர்கள் நாம் தான் இதை சத்தமாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும். பார்வையாளர்கள் தலை வலியுடன் வெளியேறினால் எந்தப் படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது!," என குறிப்பிட்டுள்ளார்.