TamilsGuide

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு காலக்கெடு

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் வழங்கப்படும் துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்ககள், மாகாண சபை உறுப்பினர்ககள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரச நிர்வாக சேவையில் உயர் பதவி வகித்த அதிகாரிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் தற்பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் மற்றும் ரவை துப்பாக்கிகள் குறிப்பிடத்தக்களவு உள்ளதை பாதுகாப்பு அமைச்சினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த துப்பாக்கிகளை 2024 டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்டவர்களுக்கு இத்தால் அறிவிக்கின்றது.

மேலும், துப்பாக்கிகள் வழங்கப்பட்ட நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதுடன், அவ்வாரு துப்பாக்கிகள் வழங்கப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு அவர்கள் வசமுள்ள துப்பாக்கிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குமாரும், மேலும் குறிப்பிடப்பட்ட நபர்கள் ஏற்கனவே துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால் அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கி இப்பணிகளுக்கு உதவுமாறும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.
 

Leave a comment

Comment