• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2024 நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு எண்ணும் முறை பற்றிய தெளிவூட்டல்

இலங்கை

எதிர்வரும் நவம்பர் 14 வியாழன் அன்று நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணுவதற்கான செயல்முறையினை தேர்தல்கள் ஆணைக்குழு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் நவம்பர் 14 ஆம் திகதி மாலை 04.15 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்துக்கு வருவதை அடிப்படையாகக் கொண்டு, வழக்கமான வாக்கு எண்ணும் பணிகள் அன்றைய தினம் இரவு 07.15 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தொகுதி முடிவுகள் மற்றும் மாவட்ட முடிவுகள் தேர்தல் செயலகத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன் ஊடகங்களுக்கு வெளியிடப்படும்.

எனவே உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வாக்கு எண்ணிக்கை செயல்முறை பின்வருமாறு தொடரும்:

• முன்னதாக ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள வாக்குகள் முதலில் எண்ணப்படும்.

• இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் ஒவ்வொன்றும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இறுதியில், ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி, சுயேச்சைக் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களின் தொகை வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.

•⁠ அதன்பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சி, சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் அவர்கள் பெற்ற அதிக வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் பணியின் போது வாக்கு எண்ணும் மையங்கள் அல்லது அருகிலுள்ள வீதிகளில் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

Leave a Reply