தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு
இலங்கை
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளானது இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார அலுவலகங்கள் நாளை நள்ளிரவுக்குள் அகற்றப்படாவிட்டால் அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமைதியான காலம் அமுலில் இருக்கும் எனவும், நாளை (12 ஆம் திகதி), நாளை மறுதினம் (13 ஆம் திகதி) மற்றும் தேர்தல் நடைபெறும் 14 ஆம் திகதிகளில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது.
அந்த நாட்களில் ஊடகங்களால் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது. குறித்த காலப்பகுதியில் ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரங்களை வெளியிடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.