மாநாடுகளுக்கு வருகைத் தரும் மக்கள் கூட்டத்தை பார்த்து பெரிய கட்சிகள் அச்சமடைந்துள்ளன- திலகரத்ன டில்ஷான்
இலங்கை
ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் வகையிலான மாநாடு இன்று காலியில் இடம்பெற்றது.
கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.
ஏற்கனவே, பதுளை, மஹியங்கனை, ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் மாநாடுகளுக்கு மக்கள் அமோக வரவேற்பை அளித்திருந்த நிலையில், இன்று இடம்பெற்ற இந்த மாநாட்டிலும் பெருமளவானோர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
பொதுத் தேர்தலில் மைக் சின்னத்தில் களமிறங்கியுள்ள இந்தக் கட்சியின் வேட்பாளர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய -களுத்துறை மாவட்ட வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் உரையாற்றுகையில், நான் கட்சியின் தேசிய அமைப்பாளராக பதவியேற்றதிலிருந்து பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தேன்.
எமது கட்சியின் மாநாடுகளுக்கு வருகைத் தரும் மக்கள் கூட்டத்தை பார்த்து பெரிய கட்சிகள் இன்று அச்சமடைந்துள்ளன.
எமது கட்சியின் மோசடி குற்றச்சாட்டுக்களில் ஈடுபடாதவர்களை தெரிவு செய்துதான் வேட்பாளர்களாக நியமித்துள்ளோம்.
இவர்களை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டியது மக்களின் பொறுப்பாகும். எமது கட்சியின் தலைவர், நல்லாட்சி அரசாங்கத்தின்போது குற்றவாளிகளுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார்.
இறுதியில் அவர் இதற்காக சிறைக்கும் சென்றார். இப்படியான ஒரு தலைவரின் வழிகாட்டலில் தான் நாம் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாம் இந்த பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை கைப்பற்றி, பிரதான எதிர்க்கட்சியாக அமர்வோம் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது என தெரிவித்தார்.