செயற்கை நுண்ணறிவை பயன்பாடு தொடர்பில் பிரதமர் ஆராய்வு
இலங்கை
தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் அரச நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்
அமைச்சிற்குள் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியதுடன் இலங்கையில் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கென தகவல் தொழில்நுட்ப சேவையில் காணப்படும் முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் டிஜிட்டல்மயப்படுத்தல் முயற்சிகள் மற்றும் அரச சேவையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கும் போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கு காணப்படும் சாத்தியங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் அபிவிருத்தியில் காணப்படும் தற்போதைய சவால்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டிருந்தது
இதில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளர்களான ஏ.கே.ஆர்.அலவத்த, எம்.டபிள்யு.கே.அடவுதகே, ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஜானக அபேசிங்க, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஸ் பெரேரா, இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பணியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கனிஷ்க கருணாசேன, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திதா ஜீ.சேனாரத்ன, இலங்கை தரவுகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் வருண ஶ்ரீ தனபால உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்